Sunday, August 29, 2010

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இலவச தொலைபேசி அழைப்புகள்.


அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இலவச தொலைபேசி அழைப்புகளை கூகிள் நிறுவனம் தமது ஜீமெயில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கம்பியூட்டர் மூலம் மேற்கொள்ள வழங்குகின்றது. இது சென்றவாரம் ஆரம்பிக்கப்பட்டு தற்போது உலகம் முழுவதும் வழங்கப்படுகின்றது.
மிக இலகுவான முறையில் மேற்கொள்ளப்படும் இல் அழைப்புகள் மிகத் துல்லியமான சப்தத்தை பாவனையாளர்களுக்கு வழங்குகின்றது.
அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இலவச தொலைபேசி அழைப்புகளைத் தவிர இந்தியா இலங்கை உட்பட சகல நாடுகளுக்கும் கூகிள் நிறுவனம் அதி குறைந்த விலையில் இந்த இன்ரநெற் மூலமான தொலைபேசி அழைப்புகளையும் வழங்குகின்றது.

இன்ரநெற் நுட்பவியலாளர்களின் கருத்துப்படி இது இன்ரநெற் மூலமான தொலைபேசி அழைப்புகளை வழங்கும் ஸ்கைப் நிறுவனத்திற்கு கூகிள் நிறுவனம் வழங்கியுள்ள பாரிய சவாலெனக் கருதுகின்றனர்.
எது எப்படி இருப்பினும் இப்படியான போட்டிகள் இன்ரநெற் பாவனையாளர்களான எமக்கு லாபமே.
உலக நாடுகள் இப்படியான தொலைபேசி சேவைகளைக் கண்டு நடுங்குகின்றன.
உதாரணத்திற்கு இலங்கையிலுள்ள எஸ் எல் ரி, டயலொக் போன்ற நிறுவனங்கள் தமிழர்கள் அதிகமாக வாழும் வெள்ளவத்தையிலிருந்து அமெரிக்காவிற்கு 66,000 நிமிட 22,000 அழைப்புகளும் 63,000 நிமிட 34,000 அழைப்புகள் கனடாவிற்கும் தினமும் மேற்கொள்ளப்படுகின்றன. அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இலவச தொலைபேசி அழைப்புகளை கூகிள் நிறுவனம் இன்ரநெற்மூலம் வழங்குமாயின் தமக்கு வருடத்திற்கு 10 – 15 வீத அழைப்புகள் வரை குறையுமென எதிர்பாக்கிறார்கள்.
செய்தி ஆதாரம் Call Lanka.

Saturday, August 28, 2010

பூனை புலியாகுமா

பூனை புலியாகுமா


இந்தப் பூனை புலியாகும் போல



எல்லா பூனைகளும் குட்டி ஆக இருக்கும் போது தமது வீட்டை வீடாக நினைப்பார்கள். வளர்ந்து விட்டால் அவ் வீடு அவர்களுக்கு ரெஸ்டுரன்ட் ஆகி விடும். நினைத்த போது சாப்பிட மட்டும் வந்தது விட்டுப் போவர்கள். வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தால் பூனை எங்கிருந்தாலும் ஓடி வந்து விடும். அவர்களுக்கு தனது இடம் இது என்று காட்ட. அவர்கள் போனதும் இதுவும் போய் விடும்.


Sunday, August 22, 2010

அம்மாவின் ஆட்டுக் குட்டி.



அம்மாவை பற்றிச் சொல்லப் போனால் பல வருடங்கள் சொல்லலாம். அம்மாவின் ஆடுகள் பற்றி சொல்ல அவ்வளவு காலந் தேவையில்லை எனக்கு. சின்ன வயசில அம்மாவின்ர சகல வேலைகளுக்கும் நான்தான் அவவி;ன்ர அஸிஸ்ரன்ற். எனக்கு அம்மாவில அன்புந்தான் அதே நேரம் அவ வைக்கிற சில்லறை காசுகளையும் 'நோட்' பண்ணலாமல்லோ அடிக்கடி கேட்டு இல்லையெண்டா சீல முடிச்சில இருக்கு, சீரக ரின்னுக்குள்ள கிடக்கு எண்டு காட்டி கேட்கலாமல்லோ அது மறைமுக காரணம்.
அம்மா எப்பவும் ஒரு மறிஆடு தான் வளர்ப்பா. அது குட்டிகள் போட்டா அதுகளை வளரும் வரைக்கும் (விக்கிறது வரை) பாக்கிறது அம்மாவோட பொறுப்பு. அடியேன் அஸிஸ்ரன்ற், குட்டிகள் வித்தவுடன் காசு கேட்டுப் பெற்றுக்கொள்வது வழக்கம்.
அம்மாவிடம் எத்தனையோ முறை லக்ஸ்மி மாடு ( யாழ்ப்பாணத்தில எல்லா வீட்டிலயுமிருக்கிற பசு மாடுகளுக்கும் பெயர் லக்ஸ்மிதான்.) வளப்பமெண்டு கேட்டிருக்கிறன் ஆனால் அம்மாவுடைய சொய்ஸ் ஆடுதான். அதுவும் செவி ஆடுதான். செம்மறி ஆடு, அரிக்கன் ஆடு ஒண்டுங் கிடையாது.
ஓரு நாள் காலைமை ஒழுங்கையில பெடியங்களோட விளையாடிக் கொண்டிருக்கயில என்னோட நிண்ட வில்லியம் (எமது வளர்ப்பு நாய்) திடீரென எஸ்கேப். திரும்பிப்பார்த்தால் நிறுத்தப்பட்டிருந்த கள் இறக்குபவரின் சைக்கிள் மேல் இரண்டு கால்களைப் போட்டு கள் சேர்க்கும் போத்தலை மணந்து பார்க்க முயற்சி செய்து கொண்டிருந்தது. அம்மாடி, சைக்கிள் விழுந்தா நானுஞ் சரி, வில்லியமுஞ் சரி. ஓடிப்போய் ஆளை இழுத்து வந்தன். அப்போதான் எனக்குக் கிளிக் ஆச்சுது வில்லியம் கள்ளுக் குடிக்கப் பார்க்கிறார் எண்டு.
ஓடிப்போய் வீட்டிற்குள் பெரிய தேங்காய் சிரட்டை தேடி எடுத்து வெளியே வரும்போது அம்மாவின் குரல் கேட்டது 'கெதியா இங்க வா ஆடு ரெண்டு குட்டிகள் போட்டிருக்கு'.
ஆட்டுக்குட்டி வீட்டிலிருக்கும் கள்ளு சைக்கிள் போயிருமே?
கள்ளு சைக்கிளருகே போகும் போது கள்ளுக்காரரும் சரியாக கள்ளிறக்கிக் கொண்டு வந்தார். அவரிடம் அப்ப மாவிற்குவிட கள்ளு வேண்டுமென சிரட்டையை கொடுத்தேன். அவரும் நிரம்ப தந்தார். வில்லியமும் என் பின்னாலேயே வந்துகொண்டிருந்தார்.
கள்ளை அப்படியே வீட்டிற்குள் கொண்டு போய் முற்றத்து மண்ணை குமித்து அதில் வைத்தவுடன் வில்லியமும் கள்ளை குடிக்கத் தொடங்கியது. அதை அப்படியே விட்டு விட்டு அம்மாவிடம் ஓடினேன். அம்மா அப்போது தான் குட்டிகளின் கால் குளம்புகளை வெட்டிக் கொண்டிருந்தா, நான் பக்கத்தில் போய் நின்று பார்த்தேன். ஒரு மறி ஒரு கிடாய். கிடாய் சுத்தமான வெள்ளை. அம்மா கைகளை கழுவிக் கொண்டு கடும்புப் பால் கறக்க வெளிக்கிட வில்லியமும் வீட்டைச்சுற்றி ஓட வெளிக்கிட்டது. வில்லியம் ஓடுது ஓடுது நிற்காத ஓட்டம். அம்மா கேட்டா ஏன்ரா வில்லியம் இப்பிடி ஓடுது? அதா, எங்கட ஆடு குட்டிகள் போட்டதில இதுக்குச் சந்தோஸம் போல. அம்மா என்னை ஒரு மாதிரியாப் பாத்தா.
வில்லியமும் அரை மணித்தியால ஓட்டத்தின் பின் நல்ல பிள்ளையாக வந்து படுத்துக் கொண்டார்.
நாட்கள் செல்லச் செல்லச் ஆட்டுக் குட்டிகளும் அவைகளின் குழப்படியும் அதிகரித்துச் சென்றன. வெள்ளை ஆட்டுக்குட்டிக்கு மணி எனப் பெயரிட்டேன்.
ஏனெனில் அது என்னை அடையாளங் கண்டு என்னுடன் சேரத்தொடங்கியதே காரணம். எனது உள்ளங்கையை காட்டினால் முன் இரண்டு கால்களையும் தூக்கிய வண்ணம் வந்து இடிக்கும் அல்லது பின்னோக்கி நடந்து சென்று பின்னர் வேகமாக ஓடி வந்து இடிக்கும்.
இது தினமும் பாடசாலை முடிந்த பின்னர் மணிக்கும் எனக்கும் இடையில் நடக்கும் விளையாட்டு.
ஆனால் அம்மாவிற்கு இது பிடிக்கவில்லை. நான் மணியை பழுதாக்குதாகவும் இதனை நல்ல ஆடாக வளர்க்கும் படியும் அம்மா சொன்னதனால் எமது விளையாட்டுகள் இரகசியமாகவே நடந்தன.
ஒரு நாள் பாடசாலை விட்டு வீடு போகும்போது வழியில் கண்ட பக்கத்து வீட்டுக்காரர் 'தம்பிக்கு நல்ல அடி விழப்போகுது போல, அங்க அம்மா பாத்துக்கொண்டு நிக்கிறா' எண்டார்.
ஓடிப்போய் பக்கத்து வீட்டில எங்கட வீட்டில என்ன பிரச்சனை என்று கேட்டபோது அம்மாவிற்கு ஆட்டுக்குட்டி நல்லா இடிச்சுப் போட்டுது எண்டினம்.
அம்மாவிடம் போய் நாலு வாங்கிக் கட்டிக்கொண்டு மெதுவாக அம்மாவிடம் என்ன நடந்தது என்று கேட்டன். அதுவா மணி எனக்குப் பக்கத்ததில வந்து நின்று காலுக்குள்ள குறுக்குமாறா நடந்து கொண்டிருந்தது. அதைத்தள்ளிவிட்டு இந்தப் பக்கம் வரக்கூடாது எனச்சொல்லி கை விரலைக்காட்டிச் சொல்லி விட்டு நடந்து இந்தப்பக்கம் வந்தனா, நீ கையைக் காட்டினா இடி எண்டு பழக்கியிருக்கிறாய் தானே இது நான் சண்டைக்குக் கூப்பிடுகிறேனென நினைத்துப் பின்பக்கமாக வந்து நல்லா இடிச்சுப் போட்டுது.
பிறகென்ன எனக்குத் தெரியாமல் ஒரு நாள் யாருக்கோ ஆட்டுக்குட்டியை அம்மா வித்துப்போட்டா.