Friday, August 31, 2012

புளு மூன் (Bluemoon) ரகசியமாய்த் தேடிப் பார்த்தவர்களுக்கு.....

நீலநிற சந்திரனை இரவிரவாகத் தேடிய தமிழ்ப்; பெருங்குடி மக்களே நீங்கள் அதைக் காணவில்லைத்தானே? இன்ரநெற்றில் அவசரமாய் அலைபவர்களுக்கான தண்டனையே இது.
புளு மூன் - Blue moon– என்பது ஒரு காரணப் பெயர் மட்டுமே. அதாவது ஒரு மாதத்தில் இரண்டு பூரண சந்திரன்கள் ஏற்படும் பட்சத்தில் இரண்டாவது பூரண சந்திரன் புளுமூன் (Blue moon) என்றழைக்கப்படும்.
உண்மையான மிடாக் குடியர்கள் தாம் குடிகாரர்கள் என ஏற்றுக்கொள்வதில்லை. இசகு பிசகாக குடித்த நிலையில் அகப்பட்டு விட்டார்களாயின் அதை ஆங்கிலத்தில் இப்படித்தான் சொல்லிச் சமாளிப்பார்கள். ;I drink once in a blue moon. அதாவது 2,3 வருடத்திற்கொரு முறைதான் குடிப்பாராம். அதாவது ப்ளுமூன் 2 - 3 வருடங்களுக்கு ஒரு முறை தான் ஏற்றப்படும் ஆனால் நீல கலரில் அலல.
கடைசியாக ஏற்பட்டது 2009 மார்கழியில் இது ஏற்பட்டது.
இப்போ 31 ஆவணி 2012
அடுத்து 2015 ஆடியில்.
இப்போ விளங்கி கொண்டீர்களா ப்ளுமூன் என்றால் என்னவென .
மறுப்பு இருந்தால் கமெண்ட் பகுதியில் பதியுங்கள்.


Wednesday, August 29, 2012

நல்லூர் கோவில் கள்வர்களும் தாலிக்கொடி தோல்விகளும்.

நல்லூர் முருகன் கோவிலில் இம்முறை களவுகள் வெகுவாகக் குறைந்திருந்தன. காரணம் பெண்கள் குழந்தைகள் மிகக் குறைவாகவே நகைகள் அணிந்திருந்தனர் அத்துடன் 2,000க்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான உத்தியோக உடையணிந்த பொலிஸாரும் சாதாரண உடையணிந்த பொலிஸாரும் காலையிலிருந்து இரவுவரை கடமை புரிந்தனர். இவர்களால் ஆரம்பநாட்களிலேயே வெளியூர்களில் பரிட்சயமான திருடர்கள் களையெடுக்கப்பட்டனர். இந்த செய்தி பத்திரிகைகளில் பெரிதாக இடப்பட்டதனால் கோஸ்டியாக செயற்படும் மற்ற வெளியூர் திருடர்கள் தொழிலில் ஈடுபட பயந்துவிட்டனர் போலும். யாழ்ப்பாணப் பெண்களுக்கு மிகுந்த சந்தோசத்தைத் தரக்கூடிய விடயம் என்னவென்றால் தாலிக்கொடியோடு 2,3 சங்கிலிபோட்டு அவற்றை மறைக்காதபடி  சோல் போட்டோ அல்லது சேலை கட்டியோ ஸ்கூட்டியில் போவதுதான். இந்த சந்தோசம் கட்டின மனுசனுக்குத் தேத்தண்ணி கொடுக்கும்போது அவர்களுக்கு கிடைக்குமோ தெரியாது.





சரி யாழ்ப்பாண பெண்களும் இம்முறை நல்லூர் முருகன் கோவில் திருவிழாவிற்கு வரும்மோது பெரிய கழுத்து பிளவ்ஸ் அணிந்து தாலிக்கொடி உள்ளேயிருப்பது போல காட்டிக்கொண்டனர். பவுண் விலைப்படி. கிலிற் நகையோட கோவிலுக்கு வந்தால் நெற்றியில் அடித்ததுமாதிரிக் கேள்வி கேட்கும் அயல்வீட்டுப் பெண்கள் 'என்ன கிலிற் நகையோட கோயிலுக்கு வந்திருக்கிறாய், நகையெல்லாம் அடவோ அல்லது வித்துப்போட்டியளோ' என்ற கேள்விகள்.

எது எப்படியிருப்பினும் நம்ம நாட்டுப்பெண்களுக்கு யார்யாருடய கொடி விற்கப்பட்டுபிட்டது, யார்யாருடய கொடி அடவில, லொக்கரில என புள்ளிவிபரங்கள் விரல் நுனியில் வைத்திருக்கிறார்கள்.
•    கனகசபை போய்ட்டார்தானே அவற்ற மனிசியின்ர கொடிக்கு என்ன நடந்தது? இந்த இம்போட்டன்ற் கேள்விக்கு பதில் காணவெண்டு அந்த அயலட்டம் பட்ட பாடு உங்களுக்குத்தெரியுமா? அடுத்த வீட்டுக்காரர்கள் ரேடியோ ரீவி எல்லாம் நிப்பாட்டிப்போட்டு மதிலோட மதிலாக சாய்ந்து கிடந்து கூட்டுறதுமாதிரியும் கழுவுறது மாதிரியுங் கிடந்து ஒட்டுக்கேட்டு கண்டுபிடித்து விட்டினம்.
கடைசிப்பெடியனுக்குத்தான் எண்டு இருந்ததாம் அவன் எக்கவுண்டனாகி விட்டபடியால் கஸ்டப்பட்டுப்போன இரண்டாவது பெடியனுக்குத்தான் எண்டு தீர்மானமாகி கடைசிப் பெட்டையின்ர லொக்கர்ல வைச்சிருக்காம். கஸ்டப்பட்டுப்போன இரண்டாவது பெடியனுடய மகளுக்கு நல்லது ஏதாவது நடக்கேக்க அதைக் குடுப்பினமாம். இப்பதான் அயலட்டமெல்லாம் நிம்மதியாயிருக்கு கொடிப் பிரச்சனை அறிந்தாச்சு எண்டு.

இந்தமுறை ஒரு அதிசயம் நடந்தது நம்ம றோட்டில இருக்கிற ஆக்களெல்லாம் சேர்ந்து நல்லூருக்குப் போகேக்க ஒரு சங்கிலியும் ஒரு சோடி காப்பும் போதுமெண்டு தீர்மானிச்சு அதன்படி நடந்தினம். ஆனால் காரைநகர் கடைக்காரற்ற மனிசிமட்டும் தான் தாலிகட்டின நாள்ல இருந்து இந்த 18 பவுண் கொடியை கழற்றினதில்லையாம் கழட்டவும் மாட்டனெண்டு மனுசனிட்டையும் சொல்லிப்போட்டாவாம். கள்ளன் என்னட்ட வந்தால் ஒண்டில் நான் அல்லது அவன் எண்டு சவால் வேறயாம்.


மனிசி தனியத்தான் நல்லூர் முருகன் கோவில் திருவிழாவிற்கு போய் வந்து கொண்டிருக்கிறா. நம்ம றோட் பொம்பிளையள்தான் மோட்டசைக்கிளில்ல இருந்து பாய்ஞ்சு அறுத்தானாம் சைக்கிள்ள வந்து புடுங்கினவங்களாம் எண்டு அவ போறநேரம் சொல்லுவினம் மனிசியும் கேள்விப்பட்டனான் எண்டு சொல்லிப்போட்டு போய்க்கொண்டிருக்கும்.
ராசுவின்ர பெடியன்தான் கள்ளர் அவவிற்கு கிட்டப்போகாத காரணத்தை ஒரளவிற்கு ஊகித்து வெளியில் சொல்லியுள்ளான்.
அந்த மனிசி கோயிலால வரும்போது அரை மணித்தியாலம் கிலிற் நகைகடையுள் நின்று பார்த்துவிட்டு வருவதால் கள்ளருக்கு கொன்பியூஸாம் அவ போட்டிருக்கிறது கிலிற்றா தங்கமா எண்டு. இதுதான் அவவின் தற்போதய வெற்றியின் ரகசியமாம்.
எப்பிடியிருந்தாலும் அடுத்த முறை நல்லூர் முருகன் கோவில் திருவிழாவிற்கு நாங்கள் போகாமலா இருக்கப்போறம் கள்ளரும் வராமலா இருக்கப்போகினம்?

எல்லாம் நல்லூர் முருகன் துணை.



  

Tuesday, August 28, 2012

கொழும்பு கோல்பேஸ் கடற்கரைக் கூத்து.

             
கொழும்பு கோல்பேஸ் கடற்கரை  20, 30 வருடங்களுக்கு முன்னரிருந்த தோற்றத்தை இழந்துவிட்டாலும் சில புதுப்பொலிவுகளைப் பெற்றுள்ளது. வரிசையாக நடப்பெற்றுள்ள பனைமரங்கள் மக்களிடையே மலர்ந்திருந்த கடைகள் வரிசையாக ஓரங்கட்டப்பட்டுள்ளன.
உயரமான இலங்கைக் கொடிக்கான கொடித்தம்ப மேடையும் அதில் கொடியேறு;றும் இறக்கும் பணிக்கட்டைளைகளும் அதைச்சார்ந்து கடலுக்கு மேலாக நீண்டதூரம் சென்று பார்வையிடக்கூடிய பாலம் போன்ற கட்டுமானமும் மக்களை வெகுவாகக் கவர்கின்றன.
கொழும்பு கோட்டையிலிருந்து பஸ் கட்டணம் ரூ 9ம், வெள்ளவத்தையிலிருந்து ரூ 16ம் ஆகும்.
முன்னரெல்லாம் பகல்நேரத்தில் குடைகளினுள் காதல் மொழிபேசிய வண்ணமிருக்கம் ஜோடிகள் ஏராளம். இப்போது இவர்களின் எண்ணிக்கை வெகுவாகக்  குறைந்துவிட்டது. காரணம் பொலிஸார் இவர்களைப் பிடித்துச் சென்று கட்டாயத் திருமணம் செய்து வைப்பதாக வெளிவந்த வதந்தியேயாகும்.

இங்கு வெளிநாட்டு உல்லாசப்பயணிகளையும் இடையிடையே காணலாம். எனினும் உள்ளுர் பயணிகளை அதுவும் பாடசாலை விடுமுறை நாட்களில்  பெருந்தொகையான எண்ணிக்கையில் காணமுடியும். கடலில் இறங்கி நீராட வேண்டாமெனும் அறிவித்தற் பலகையிலுள்ள அறிவித்தலையும் மீறி கடலில் இறங்கி விளையாடுவோர் ஏராளம். அவர்களில் ஒரு சிலர் காணாமற்போவதுமுண்டு.

இங்கு மக்கள் வீதியோரக் கடைகளில் விற்கும் இறால் வடை, நண்டு வடை போன்றவற்றை விரும்பி உண்பர். கொத்து ரொட்டி, ப்ரயிட் றைஸ் போன்றவையும் இங்கு பிரசித்தம். கூல் பியர் சேவையுமுண்டு அதற்கென பிரத்தியேக நடமாடும் சேவையுமுண்டு.
வெளிநாடுகளிலிருந்து வரும் தமிழர்கள் தமது குடும்பத்துடன் மாலை வேளைகளில்
இங்கு வருவர். அநேகமான குடும்பத் தலைவர்கள் ஏதாவது சாட்;டுப்போக்குச் சொல்லி குடும்பத்தினரிடமிருந்து தலைமறைவாகி விடுவர். பின்னர் 1,2 மணிநேரத்தின் பின் அரைப்போத்தல் சாராயம் அடித்த சந்தோசத்தில் நாலு காலில் நடந்தபடி கமகம வாசத்துடன் குடும்பத்தினருடன் ஒன்றிணைவர். மனிசிமார் திட்டுவதை நேரடியாகக் கேட்கலாம். என்னண்டுதான் இது விக்கிற இடங்களைக இது  கண்டு பிடிச்சுக் குடிக்குதோ, இப்ப என்னெண்டு அக்கா வீட்டை போறது? மரியாதை கெடப்போகுதே எண்டு புலம்புவர்.

மீண்டும் பஸ்ஸில ஏறி வீடு போகும்போது ஜேர்மன், பிரான்ஸ், இத்தாலி என தான் வசிக்கும் நாட்டு மொழியில் ரூபா 500 நோட்டை இழுத்து ரிக்கற்றுக்கென கண்டக்டரிடம் கொடுப்பார். விசயந்தெரிந்த கண்டக்டர் மிச்சக்காசை கொடுக்காமல் பணத்துடன் முன் வாசலுக்கு போய்விடுவான். மனிசி மிச்சக்காசை வாங்கப்பா மிச்சக்காசை வாங்கப்பா எண்டு கிண்டுவா. அவருக்குத் தெரியும் ஓடற பஸ்ஸல போட்ட தண்ணியோட நாலு காலில முன்னால நடந்து போய் மிச்சக்காசை வாங்கிறத விட சீற்றுக்குள் கால்விட ஏலாதெண்டு திட்டிக்கொண்டு வீட்ட போறது மேல் எண்டு.



                                                                                                                      


Saturday, August 25, 2012

நல்லூர் மிகமிக கட்டுப்பாடான புனிதபூமியாக மாற்றப்படுகிறது.

நல்லூர் கோவில் கட்டுப்பாடுகளுக்கு பிரசித்தமான ஒன்று. எற்கனவே ஆண்களின் உடை சம்பந்தமாகவும் குறித்த நேரத்துக்கு பூசைகள் நடப்பது சம்பந்தமாகவும் உள்ளவை மிகவும் பிரசித்தம்.

 கோவிலினுள் கடமையாற்றும் பொலிஸ்காரர்கள் சேர்ட் பனியன் இன்றியே கடமையாற்றுகின்றனர். அது போல கோவிலினுள் செல்லும் ஆண் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் சேர்ட் பனியன் இன்றியே செல்லவேண்டும். சிகப்பு சால்வை கட்டியபடி உள்ள  கோவில் பணியாளர்கள் இவற்றை கவனித்துக்கொள்வார்கள்.

நல்லூர் திருவிழா காலத்தில் முன்னரைவிட இவ்வருடத்தில் (2012) கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்றே சொல்லலாம்.
நல்லூர் திருவிழா காலத்தில் சுவாமி வீதிவலம் வரும்போது ஆண் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் சேர்ட் பனியன் உடன் சுவாமிக்குக் கிட்டவாகச் சென்றால் சிகப்பு சால்வை கட்டிய கோவில் பணியாளர்களால் கிட்டே நிற்கவேண்டாமெனக் கலைக்கப்படுகின்றார்கள். மேலும் நல்லூர் திருவிழா காலத்தில் வெளி வீதியினுள் வரும் முன் காலணிகளை அங்கு கழற்றும்படி கோரப்படுகிறார்கள். அதாவது நல்லூர் திருவிழா காலத்தில் வெளிவீதியில் கூட காலணி போடத் தடை. கண்ட இடத்தில் தேங்காய் உடைத்தல் தடை. தீச்சட்டியில் நீங்கள் கற்பூரம் போடமுடியாது கோவில் பணியாளர்களிடம் கொடுத்துதான் அதைப் போடவேண்டும், உங்கள் பாதுகாப்புக்காக.

மாலை திருவிழா முடிந்தவுடன் இரவு 10 – 11 வரை நடந்து – ஓடி - விளையாடும் ஜீன்ஸ் போட்ட இளைஞர்களுக்கு எதுவித கட்டுப்பாடுகளும்  கிடையாது.

ஆனால் ஒரே ஒரு கேள்வி. இந்த கட்டுப்பாடான சைவக் கோவிலைச் சுற்றவர ஒரு கடையில் 150 பேர் வரை அமர்ந்து ஐஸ்கிறீம் சாப்பிடக்கூடியவாறாக 5 – 6  ஐஸ்கிறீம் கடைகள் உள்ளன. இந்த பக்தகோடிகளும் அரோகரா என்று சொல்லி முருகனைக் கும்பிட்டுவிட்டு வந்து இங்கு முட்டை கலந்த ஐஸ்கிறீம் சாப்பிடுகிறார்களே நியாயமா?








Friday, August 24, 2012

நல்லூர் தேர் - யாழ் மேளகாரர் ஓட்டம். கேரள மேளம் அட்டகாசம்.

நல்லூர் தேர் - யாழ் மேளகாரர் ஓட்டம். கேரள மேளம் அட்டகாசம்.
இம்முறை 2012 நல்லூர் தேர் திருவிழாவில் கோவில் முதலாளியின் ஆலோசனைப்படி கேரள மேளக் கோஸ்டியோடு சேர்ந்து வாசிக்க மறுத்த யாழ் நாதஸ்வரக்கலைஞர்கள் தேர் திருவிழாவிலிருந்து வெளி நடப்பு செய்தனர்.
கேரள மேளக் கோஸ்டியின் டண்டணக்கா டணக்கணக்கா மேளத்துடன் நல்லூர் தேர் திருவிழா நடைகெற்றது.
தில்லானா மோகனாம்பாளில் சிவாஜிகணேசன் வெடிச்சத்தத்திற்கு நாதஸ்வரம் வாசிக்க மறுத்த நிலை.
இதுதான் ஞானசூனியமோ?

இந்த வீடியோக்கள் இரண்டையும் பாருங்கள், இவை ஒத்துப்போகுமா?
யாராவது நல்லூர் கோவில் முதலாளிக்கு இவை பற்றி விளங்கப்படுத்தமாட்டார்களா?


கேரள மேளம் கேட்டுப் பாருங்கள் .



யாழ்ப்பாண தவில் கீழே ( இம்முறை 2012 நல்லூர் தேருக்கு இல்லை )






நயினாதீவு பயணம் 2012

நயினாதீவு பயணம் 2012.
தற்போது யாழப்பாணம் குறிகாட்டுவான் துறைக்கான வீதி குண்டு குழிகள் இன்றி மிக நன்றாக உள்ளது. ஒரே ஒரு குறை பண்ணை ரோடு ஒடுக்கமாகவுள்ளது, இதன் காரணமாக எதிர் எதிராக வரும் பஸ்கள் குறித்த இடங்களில்தான் ஒன்றையொன்று தாண்ட முடியும். மற்றும்படி பிரயாணத்தில் எதுவித அலுபுமில்லை. மண்கும்பான் பகுதி ரோடு கைவே மாதிரி எனவே பஸ் 60 - 70 km ஸ்பீடில் பறப்பதை அனுபவிக்க முடிந்தது.
டிக்கெட் இனது தமிழும் மாறிவிட்டது டிக்கேட் எனத்தான் கண்டக்டர் சொல்லுகிறார். இந்த ரோட்டில் உள்ளவர்கள் எல்லாம் பஸ் டிரைவர்களின் நண்பர்கள் எனவே அவர்கள் இறங்க விரும்பும் இடங்களில் எல்லாம் பஸ் நின்று ஆட்களை இறக்கும் ஏற்றும். sunglass தொப்பி என்பன பயணத்தில் உதவியாக இருக்கும். மதிய உணவு ஆலய மடத்தில் இலவசமாக வழங்கபடுகிறது. வெளி கடைகளில் கொக்கா கோலா போன்றவை கூலாக வாங்கலாம் 5 - 1 0 ரூபா கூடுதலாக கொடுக்கவேண்டி இருக்கும்.

யாழில் இருந்து காலை 6.00 மணிக்கு நயினாதீவு அம்பாளை தரிசிக்க பயணத்தை சத்திர சந்தியில் பொன்னம்மா மில் உன்னால் ஆரம்பிப்பது நல்லது, இங்கு வைத்து  CTB , Private பஸ்களை  பிடிப்பது மிக இலகுவானது.
2 மணிக்கு கோவிலில் இருந்து பயணத்தை மீள ஆரம்பிப்பதும்  நல்லது


யாழப்பாணம் நயினாதீவு பயணம் பஸ் கட்டணம் Rs 75/-
ஒரு மணி நேர பஸ் பயணம். குறிகாட்டுவான் துறைக்கு.
20 - 30 நிமிட படகு பயணம் பெரிய படகு rs .50/- சிறிய படகு 30/-
நயினா தீவில் உள்ளூர் பஸ் சேவையும் உண்டு























நல்லூர் திருவிழா 2012.

நல்லூர் தேர்  திருவிழா 2012 பூத் தூவும் அரச ஹெலிகாப்ட்டர்.
காலம்  மாறிவிட்டது.