Saturday, November 16, 2013

காகங்களும் தமிழர்களும் பல நூற்றாண்டுகளாக இணைந்தவர்கள்.

 முற்காலத்தில் கப்பலில் செல்லும் தமிழ் கடலோடிகள் தம்முடன் எடுத்துசெல்லும் காகங்களை பறக்க விட்டுப்பார்ப்பார்கள். அவை திரும்பி வந்தால் கரை தூரமாகவுள்ளது எனக் கொள்வர். அவை பறந்தே போய் விட்டால் கரை அண்மையில் உள்ளதென்பர்.
சனி பகவானின் வாகனமாக காகம் கொள்ளப்பட்டுள்ளது. அதனால் இதற்கு சனிக்கிழமைகளில் அநேகமான வீடுகளில் மதிய உணவு வழங்கப்படும். விசேட நாட்களிலும் அதுவும் புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகளில் இவற்றிற்கு சாப்பாடு வழங்கவேண்டுமென விரதமிருப்போர் கா கா வென ஓடித்திரிவதை காணமுடியும்.

பெரிய விருந்துகளின் போது காகங்களுக்கு உணவு முதலில் வைத்து விட்டே பந்தியில் உணவு பரிமாறப்படும். முதலில் உண்ட காகம்  இறக்காமலிருந்தாலே பந்தியில் உள்ளவர்கள் உணவை சாப்பிட தொடங்குவர்.

ஒரு பழைய பாடலில்  காகங்களிடம் காணப்படும் ஆறு நற்குணங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

காலை எழுந்திருத்தல் காணாமலே புணர்தல்
மாலை குளித்து மனைபுகுதல் – சாலவே
உற்றாரோ(டு) உண்ணல் உறவாடல் இவ்ஆறும்
கற்பாயே காக்கைக் குணம்.
                                                        (விநோத ரச மஞ்சரி)

ஒரு காகம் இறந்து விட்டால் மற்ற காகங்கள் எல்லாம் ஒன்று கூடி அதற்காக அழுவதையும் நீங்கள்  காணமுடியும்.
அதே போல இவை தோட்டிகள் என்றும் அழைக்கப்படுகின்றன, ஏனெனில் ஏதாவது சிறு மிருகங்கங்கள் இறந்துவிட்டால்  இவை ஒன்றுகூடி அதனை தின்று முடித்துவிடும்.
 இவற்றின் இரண்டு கண்களுக்கும் பொதுவாக ஒரு கண்மணியே உள்ளதாக கூறுவர்.
துவக்கை கண்டால் இவை பறந்து விடும்.
முகம் பார்க்கும் கண்ணாடியில் தெரியும் சூரியனைக் கண்டாலும் காகம்  பறந்து விடும்.
இப்போவெல்லாம் மரங்கள் நகரங்களில் இல்லாத படியால் நாய்கள்  எல்லாம் மின்சாரக் கம்பங்களில் ஒன்றுக்கு போகின்றன. காகங்களும் தமது கூடுகளை மின்சாரக் கம்பங்களில் கட்டி முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன.
முன்னர் போல கூடு கட்ட மரக் குச்சிகள் இல்லாத படியால் மெலிய கம்பிகளை தேடிப்  பிடித்து அதன் மூலம் கூடு கட்டுகின்றன.
பாவம் குயில்கள்தான் நகரங்களில் முன்னர் போல மரங்களில் ஒளிந்திருந்து காகக்  கூடுகளில் முட்டை இட்டு தமது இனத்தை வளர்க்க முடியாமல் அழிந்து கொண்டிருக்கின்றன.
காகங்கள் இரண்டு வகையாக இங்கு பார்க்கப்படுகின்றன.
1. அண்டங்காகம் 2. அரிசிக்காகம்
நாட்டுக்கு நாடு இவை கரைவது (கத்துவது) வித்தியாசமாகவுள்ளது.
காகங்கள் மிகவும் புத்திகூர்மை உள்ளவை.
இதோ ஒரு வீடியோ.

Sunday, November 10, 2013

100 டாலர் (ரூபா 6,250/-) விலைக்கு நச்சு மீனை சாப்பிடும் ஜப்பானியர்கள்.

Fugu எனும் இந்த மீன் வகை கொடிய நஞ்சு கொண்டவை. இவற்றின் ருசியோ அலாதி. இதை ஜப்பானியர்கள் அதிக விலை கொடுத்து விரும்பிச் சாப்பிடுகிறார்கள். இந்த Fugu (ஆற்றுப் பன்றி) மீன்களை ரெஸ்டுரன்ட்களில் சமைக்கும் சமையல்காரர் விசேட லைசென்சை இதற்காகவெனப்  பெற்றிருக்கவேண்டும்.
சமைக்கும் போது எதாவது தவறு நேர்ந்தால் அந்த மீனை உண்பவர் அந்த இடத்திலேயே உடல் விறைத்து மரணமடையலாம்.

திறமையான  சமையல்காரர்கள் சாப்பிடுபவர்களுக்கு ஒரு சிறு அதிர்ச்சி கொடுப்பார்கள் அதாவது அதைச் சாப்பிடுபவர் நாக்கில் சிறிது விறைப்பை சிறிது நேரத்துக்கு ஏற்படசெய்து அம மீனின் நச்சுக்குணத்தை அறியச் செய்வார்கள்.

இதோ அது பற்றிய  வீடியோ.





                                                 இதோ அம்மீனின் படம்.

Saturday, November 9, 2013

உங்களையெல்லாம் ஏமாற்ற எத்தனை வீடியோக்கள்

தினமும் பல வீடியோக்கள்  பணம் பண்ணுவதற்கென யூரியூப்பில் அப்லோட் செய்யப்படுகின்றன. இவை வீடியோ எடிட்டிங் முறையில் தயரிக்கப்பட்டவை  என விற்பன்னர்கள் பலர் கூறியுள்ளனர். எனினும் அவை பலரால் மற்றவர்களுக்கு பாருங்கள் பாருங்கள் என வழங்கப்பட்டு  அதிகளவு பேர்களால் பார்வையிடப்பட்டுள்ளன. அதே போல சில பிரபல இணையத்தளங்களும்  ஆராய்ந்து பார்க்காமல் பலரையும் இவற்றை பார்க்கச் செய்து அவற்றை நம்பும்படி செய்துள்ளன.
இதோ அவற்றில் சில.

மொபைல் போனிலிருந்து  வெளியாகும் கதிர் வீச்சின்  மூலம் சோளன் பொரிப்பதான  வீடியோ.


 5 செக்கனில் ஐஸ் உருவாக்கும் வீடியோ.




குழந்தையை கழுகு தூக்கிச் செல்வதாக தயாரிக்கப்பட்ட ஒன்று.

Thursday, November 7, 2013

நம்பினால் நம்புங்கள். இக்காட்சிகள் இந்தியாவில் மட்டுமே காணக்கிடைக்கும்.

இந்நிகழ்வுகளும் படங்களும் இந்தியாவில் கமெராக்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் எடுக்கப்பட்டு இணையத்தில் உலா வருகின்றன. பாருங்கள் ரசியுங்கள்.






இதோ இன்னொன்று


Wednesday, November 6, 2013

போதை தரும் பழங்களைத் தின்றுவிட்டு தள்ளாடும் மிருகங்கள்.

மனிதர்கள் மட்டுந்தான் போதையில் தள்ளாடுவார்களா? ஆபிரிக்காவிலுள்ள மிருகங்கள்கூட போதைதரும்
பழங்களை தின்றுவி;ட்டு தள்ளாடும் காட்சிகளை இந்த வீடியோவில் காணலாம். இங்கு காணப்படும் காட்சிகள் சில ஏற்கனவே வெளிவந்த திரைப்படமொன்றில காண்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.; 


இதோ அந்த வீடியோ

Sunday, November 3, 2013

ஆடுகளை மலையுச்சியிலிருந்து தூக்கிச்செல்லும் கழுகுகள்.

மலைகளில் மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகளை கழுகுகள் லாகவமாக் தூக்கி சென்றும் அடித்து தள்ளிவிட்டும்  தமக்கு இரையாக்குவதைப் பாருங்கள். வீடியோவின் இறுதிப் பகுதியில் பலவிதமான தாக்குதல்களைக் காணலாம்.
மயிர்க்கூச்செறிய வைக்கும் நம்பமுடியாத அசாத்திய தாக்குதல்கள்.

br>

Saturday, November 2, 2013

குரங்கின் மூலம் காட்டில் தண்ணீர் கண்டு பிடித்தல்.

கட்டாயம் பார்க்கவேண்டிய வீடியோ. குரங்கிற்கு உப்பை  கொடுத்து தின்ன வைத்து விட்டு ஒரு நாள் இரவு முழுவதும் அதை கட்டிவைத்து விட்டு பின் அதனை அவிழ்த்து விட்டால் அது நேராக தண்ணீர் இருக்குமிடத்தை தேடி ஓடும் அதன் பின்னல் தொடர்ந்து ஓடி இந்த காட்டு மனிதனும்  தண்ணீர் இருக்குமிடத்தைக்  கண்டுபிடிப்பதைப் பாருங்கள்.
அதிலும் முக்கியம் அவன் அந்த குரங்கை பிடிக்கும் முறை. குரங்கு கையிலுள்ள உணவை போட்டுவிட்டு  ஓடுவோமென நினைக்காமல் மாட்டுப் படுவதைப் பாருங்கள்.


10 மாத குழந்தை தாயின் பாடலுக்கு மயங்கி கண்ணீர் விடுகின்றது.

இந்த வீடியோவைப் பாருங்கள், தாய் தனது பத்து மாதக் குழந்தையைப் பார்த்து பாடலொன்று பாடவா எனக்கேட்டு விட்டு பாடும் போது சிரித்துக் கொண்டிருந்த குழந்தை கண்களால் கண்ணீர் ஓட அதை ரசித்து கேட்பதைப் பாருங்கள். கடைசியில் தாய் பிள்ளைக்குச் சொல்கிறாள், இது பாடல், பாட்டு மட்டுந்தான் என. நம்ப முடியாத ஒன்று.
மறக்காமல் உங்களுக்கு வேண்டியவர்களுக்கும் இப்பதிவை காண்பியுங்கள்.


Thursday, October 31, 2013

றீவைண்ட் யாழ்ப்பாணம் -பகுதி 3 - தியேட்டர்கள்

யாழ் மக்களின் வாழ்க்கையோடு சினிமாவும் பின்னிப்பிணைந்துள்ளது என்பது அசைக்க முடியாத உண்மை ஒன்று.புது மணத்தம்பதிகளா? பரீட்சையில் பாஸா? தீபாவளி, பொங்கலா, புது வருடப்பிறப்பா நேராக சினிமாதான்.

யால் நகரில் மொத்தம் 11 தியேட்டர்கள் இருந்தன.
மனோகரா
ராஜா
வின்ட்சர்
லிடோ
வெலிங்டன்
ஸ்ரீதர்
ராணி
சாந்தி
ஹரன்
ரீகல்
றியோ

செகண்ட் ஷோ பார்த்து விட்டு வரும் தூரவுள்ள ரசிகர்களுக்காக விசேட பட பஸ் இரவு 12 மணியளவில் எல்லா ஊர்களுக்கும் விடப்படும்.
24 மணி நேர சாப்பாட்டுக்கடைகள் எல்லாமே அசைவ உணவுக்கடைகள் கொத்து ரொட்டியுடன் படம் பார்த்து விட்டு வரும் ரசிகர்களுக்காக இரவு 12 மணிக்கும் திறந்திருப்பார்கள். A/L பரீட்சைக்கு இரவு இரவாக படிக்கும் மாணவர்களும் இங்கே வருவார்கள்.
பிளவுஸ், பரடைஸ், அலியா ஹோட்டல் என்பன அப்போதய பிரசித்த கடைகள். தற்போது பரோட்டா என அழைக்கப்படுவது முன்னர் வீச்சு ரொட்டி என இங்கு அழைக்கப்பட்டது. விலை 5 சதங்கள் மட்டுமே.பிளேன் டீயும்  5 சதம்தான்.

 கலரியில் இருந்து படம் பார்க்க 50 சதங்கள்  அதுவே பழைய படமாயின் 35 சதங்கள மட்டுமே. ஒரு தியேட்டர்  மட்டும் பழைய ஆங்கில படங்களை பெயரை  வெட்டிவிட்டு புதிய படம் மாதிரி புதிய பெயர் வெளியில் போட்டு 50 சதம் கட்டணம் வசூலிப்பர். நமது வித்துவான்கலீல் ஒருவர் எப்படியாவது கண்டுபிடித்து விடுவார். அவர் எழும்பி நின்று அடுத்த சீனில கார் நெருப்பு பத்தின இது அந்த படம் என பெயர் சொல்லுவர். அப்படி நடந்தால்  தியேட்டரில் உள்ள அனைவரும் எழும்பி நின்று ஓவென கத்துவார்கள்.பிறகென்ன மேனேஜர் வந்து எல்லோருக்கும் வெளியே போகும்போது 15 சதம் தரப்படும் என்று சொல்லுவர் பின் அதன் படி  தரவும்படும்.


ரீகல், றியோவில் சகல ஆங்கில படங்களும் காண்பிக்கப்படும். சத்தமில்லாமல் சகல வயது வந்தோருக்கான படங்களும் காண்பிக்கப்படும். வயது வந்தோருக்கானது என போஸ்டரில் பொடப்பட்டிருக்கும்.இதற்காக ஒருவரும் ஆர்ப்பாட்டம் பண்ண மாட்டார்கள். சாதாரண படம் ஒன்றை பார்த்தது போல வழமையான ரசிகர்கள் வந்து பார்த்து செல்வார்கள்.

எம்ஜிஆர்  படங்கள் என்றால் முதல் நாள் காட்சி இரவு 12 மணிக் காட்சியுடன்தான் ஆரம்பிக்கவேண்டும். வாழை  தோரணம் கட்டி படப்பெட்டிக்கு பூசை வைத்துதான் ரசிகர்கள் படத்தை ஆரம்பிக்க விடுவார்கள்.முதல் காட்சிக்கான டிக்கெட்கள் இரசிகர் மன்றகாரர்களுக்குத்தான் வழங்கப்பட வேண்டும். அநேகமான தியேட்டர்களில் கம்பிக் கூடுகளுக்குள் நின்று தான் டிக்கெட் எடுக்கவேண்டும். தியேட்டர்களில் எராளமான அடியாட்கள் வேலை செய்தார்கள். ஏதாவது பிரச்சனை என்றால் உண்டு இல்லையென்று பண்ணிவிடுவார்கள்.
சைக்கில் உள்ளவர்களுக்கு டிக்கெட்டில் முன்னுரிமை உண்டு ஏனென்றால் சைக்கிள் பார்கிங் கட்டணமுண்டு. அதை விட தியேட்டர்களில் வேலை செய்பவர்கள் அந்த சைக்கிள்களை எடுத்துக்கொண்டு சென்று தங்கள் வேலைகளை முடித்துக்கொண்டு படம் முடிய முன் மீளவும் ஸ்டாண்டில் விட்டுவிடுவார்கள்.

எனது நண்பர்களுடன் படம் பார்த்த அனுபவம்.
கூட்டமாகத்தான் படம் பார்க்கசெல்வோம். குறித்த இரண்டு நண்பர்கள் கிட்டே மட்டும் இருக்கமாட்டேன்.
ஒருவன் படத்தில் யாராவது பயங்கரமாக சண்டையின் போது குத்தினால் அதே குத்தை அவனறியாமலே அருகிலுள நண்பரின் கைகளில் விடுவான். அப்படி இடி எனக்கும் விழுந்துள்ளது. சண்டைப்படமாகில் அவனருகே இருந்து பார்க்கவே மாட்டேன். அவனிடம் அடி வாங்க ஏலாது.

அதே போல இன்னொரு நண்பன் படத்தில் ஏதாவது காமெடி சீன் படத்தில் வந்தால் போதும்  தான்  சிரிப்பது மட்டுமில்லாமல் அவனை அறியாமலே இரண்டு கைகளில் உள்ள விரல்களினாலும் எமது வயிற்றில் கீச்சம் காட்ட தொடங்கி விடுவான் சிரியடா சிரியடாஎன்று. எனவே இவனுக்கும் பக்கத்தில் இருந்து படம் பார்க்கமுடியாது.

ஏற்கனவே அந்த படம் பார்த்த சில நண்பர்கள் பக்கத்தில் இருந்துவிட்டால் பிளாக் மெயில் பண்ணுவார்கள் இன்டர்வெல்லுக்கு கச்சான் வாங்கி தராவிட்டால் படத்தின் கதையை சீன்கள் வருமுன்னே சொல்வோமென. பிறகென்ன கச்சான் வாங்கி கொடுக்கத்தான் வேண்டும்.

றீவைண்ட் யாழ்ப்பாணம். 1960-பகுதி 2

யாழ்ப்பாணத்தில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட மாடுகள் பொருட்களை இடத்துக்கிடம் எடுத்து செல்ல பெரும் பங்காற்றின. இம் மாடுகள் வடக்கன் மாடு காங்கேயன் மாடுகள் என அழைக்கப்பட்டன இம் மக்களால் அழைக்கப்பட்டன. அழகான வெள்ளை நிற மாடுகள் கழுத்தில் பெல்டில் கட்டிய சலங்கைகள் குலுங்க குலுங்க இவை செல்லும் அழகே அழகு.

(இது சிறிய வண்டில்)

இவை இழுத்துச்செல்லும் வண்டில்கள் பெரியவை. அதன் அடிப்புறத்தில் இவற்றுக்கான சாப்பாடுகள் கட்டப்பட்டிருக்கும். பின்புறத்தில் ஒரு மண்எண்ணெயில் எரியக்கூடிய அரிக்கன் லாம்பு கட்டப்பட்டிருக்கும். இது  இரவு நேரத்தில் வண்டியை அடையாளங் காட்டவென எரியவிடப்படும்.

கொடிகாமம் சாவகச்சேரி பக்கங்களில் இருந்து பின்னிய தென்ஓலைகள் இம் மாட்டு  வண்டிகள் ஏற்றி யாழ்   நகரை இரவு வந்தடைந்து வீடு மேயவும் வேலியடைகவும் என ஓலைகளை வீடு வீடாக பறித்துவிட்டு செல்வார்கள்.

அதேபோல தீவுப்பகுதிகளிலிருந்து  வண்டில் வண்டிலாக பூவரசம் இலைகள் ஏற்றிக்கொண்டு யாழ்   நகரை இரவு வந்தடைந்து சத்திரம் சந்தி,நாவலர் சந்தி போன்ற இடங்களில் தங்கி காலையில் கொக்குவில், இணுவில் சுன்னாகம் போன்ற இடங்களுக்கு சென்று விற்பார்கள்.
அதே போல இவ்வகை வண்டில்கள் சுன்னாகம் மருதனாமடம் போன்ற இடங்களில் இருந்து வாழைக்குலைகளை ஏற்றிக்கொண்டு யாழ்   நகரை பகல் வேளைகளில் அடைந்து சந்தையில் கொடுப்பார்கள்.

இவற்றை விட மாட்டுவண்டில் சவாரிக்கு என விசேட வகை மாடுகள் இங்கு வளர்த்தார்கள் இன்றும் வளர்க்கிறார்கள் . இவற்றின் பெயர்கள் புதுமையானவை.கலருக்கேற்ப இவை வழங்கப்படும். நரையன் பொட்டன் வெள்ளையன் என்ன விதம் விதமாக  வழங்கப்படும். போட்டிகளில் இரட்டை திருக்கை ஒற்றைத் திருக்கை என இரண்டு வகைப்படும். போட்டிகளின் முன் சிலர் மாடுகளுக்கு சாராயம் பருக்கி விடுவார்கள் வேகமாக ஓடுமென்று. மாட்டுவண்டில்கள் போட்டிகளில் ஓடும்போது மாடுகளை துவரங் கம்புகளால் அடிப்பார்கள். அதன் அடியில் பொருத்தி வைத்துள்ள ஆணிகளால் குத்துவார்கள். சிறு வில்லுக் கத்திகளாலும்  குத்துவார்கள். அதை  விட வண்டில் சாரதிகளின் கால்கள் மாடுகளின் கால்களுக்கிடயிலும் புகுந்து விளையாடும்.
அநேகமான போட்டிகள் யாழ் முற்றவெளியில் நடக்கும். முன்னர் நடந்த  தினகரன் விழா  இதற்கு மிகவும் பிரசித்தம். இப்போதும் வல்லைவெளியில் கோவில் திருவிழா  நடக்கும் காலங்களில்திருவிழா பார்க்கபோகும் வண்டில்காரர்களுக்கிடையில் ஓட்டப்போட்டி நடப்பது வழக்கம்.

Wednesday, October 30, 2013

றீவைண்ட் யாழ்ப்பாணம். 1960

60களில் யாழ்ப்பாணம் பலருக்கு பெரிய சொர்க்கமாகவிருந்தது. எவருக்கும் பெரிதாக ஆசைகளில்லை. ரேடியோக்கள் கூட எல்லோரதும் வீடுகளில் இருந்ததில்லை. வீட்டுக்கொரு றலி சைக்கிள் அதுவும் டைனமோ லைற் கரியருடன் இருந்தால் பெரிய சொத்து. சந்திகளில் வாடகைக் கார்கள், றிக்சோக்கள் வாடகைக்கென நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். சில பணக்கார வீடுகளில் மாடு பூட்டிய வில்லு வண்டிகள் அவர்களது பாவனைக்கென வைத்திருந்தார்கள். சந்திக்குச் சந்தி சைக்கிள் மணித்தியால வாடகைக்கு விடும் கடைகளிருந்தன. இங்கு சைக்கிள் திருத்தல், சைக்கிள் கழட்டிப் பூட்டல், ரியூப் ஒட்டுதல் போன்ற வேலைகளும் செய்து கொடுப்பார்கள். வீதி ஓரங்களில் கொல்லன் பட்டடைகாரர் மாட்டுவண்டி சில்லுகளுக்கு இரும்பு வளையம் சூடாக்கிப் போடுவதையும் மாடுகளுக்கு லாடன் அடிப்பதையும் காணமுடிந்தது.


இளைஞர்களுக்கு கோபா கரியர், றோலிங் பெல், கியர்பொக்ஸ் உள்ள சைக்கிள் கிடைத்தால் அது அவர்களுக்கு அளப்பரிய சொத்து. இதனைக்கொண்டு மாலை வேளைகளில் 'சுழட்டல்' என்றழைக்கப்பட்ட இளம் பெண்களைக் கவரும் வீதி உலா ஒழுங்கை உலாவில் ஈடுபடுவர். அனேகமாக அண்ணன்மார் தம்பிமார் இல்லாத இளம் பெண்களைத்தான் இவர்கள் பார்ப்பதற்கு தெரிவுசெய்வர். காரணம் இந்த சகோதரங்களிடம் இந்த சைக்கிள் காவாலிகள் அகப்பட்டால் அருகிலுள்ள லைட்போஸ்ற்றில் கட்டிவைத்து விடுவார்கள்.

செருப்பு, சப்பாத்து நீளக்கால்சட்டை அணிபவர்களுக்கு மட்டுமே கட்டாயமானது. ஏன் பல பாடசாலைகளில் அருகிலுள்ள முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் சேர்ட் போட்டதாக சரித்திரமில்லை. காலையில் அருகிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்கள் நேரத்துடனேயே சென்றுவிடுவார்கள் காரணம் அமெரிக்காவிலிருந்த கெயர் என்ற நிறுவனத்தினால் இலவசமாக வழங்கப்பட்ட பால்மாவினால் தயாரிக்கப்பட்ட சூடான பால்தான் காரணம்.

தொடரும்
 

கேரளாவில் படகு சஞ்சாரம்.( பகுதி 2 படங்களுடன் )

கேரளாவில் படகு விடுமுறையின் போது எடுக்கப்பட்ட படங்கள். படகிலும் ஆற்றிலும் அவை சார்ந்த இடங்களிலும் எடுக்கப்பட்டவை . இவை கட்டாயம் உங்கள் கண்களைக் கவரும். இங்குள்ள இளையதலை முறையினர் பொழுது போக்காக மீன் பிடித்துக் கொண்டிருப்பதை ஆற்றோரங்களில் காணலாம். அது போல ஆற்றோரங்களில் உள்ள வீடுகளில் வீட்டுக்கொரு படகு நிற்பதையும் காணலாம்.

இப்படங்களில் கூடுதலானவை சிங்கப்பூர்  நாகரத்தினம் அவர்களால் எடுக்கப்பட்டவை.நீங்கள் இவற்றை உங்கள் ப்ளாக் facebook  போன்றவற்றில் பாவிக்கலாம். மறக்காமல் எங்கள் பெயரையும் பக்கத்தில் போட மறக்காதீர்கள்.








































Tuesday, October 29, 2013

கேரளா படகு சுற்றுலா (படங்களுடன்).

உலகெங்குமிருந்து பல்லாயிரக்கக்கான சுற்றுலா பயணிகள் ஏன் இந்த படகுகளில் தமது விடுமுறை காலத்தைக் களிக்கவிரும்புகிறார்களென்பதை இந்தப் படங்கள் மூலம் கண்டறியலாம். நட்சத்திர விடுதிக்ளில் காணப்படும் சகல வசதிகளையும் இங்குள்ள அழகிய படகுகள் வழங்குகின்றன. உணவு வகைகள் மிகருசியாக சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. உங்கள் முன் பிடிக்கப்பட்ட மீன் எறால் போன்றவை உங்களுக்கேற்ற முறையில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றமை இங்கு மிகப்பிரசித்தம்.