Sunday, April 13, 2014

சித்திரை வருடப் பிறப்பும் போர்த் தேங்காய் அடித்தலும்.

சித்திரை வருடப் பிறப்பு அண்மித்து  விட்டாலே செத்தல் தேங்காய்  என்று அழைக்கப்படும் தேங்காய்களுக்கு மிகவும் பிரசித்தம் ஏற்பட்டு விடும். சிறிது நீளமான தாகவும் சுற்றளவு சிறிதாகவும் மிகவும் உறுதியாகவும் காணப்படும் இது போர்த்தேங்காய் என்று அழைக்கப்படும். இவ் வகை தேங்காய்கள் சிலவகை  தென்னை மரங்களிலேயே காய்க்கும். உடைத்தால் மிக சிறிதளவு இளநீரே கிடைக்கும். இதனை திருவலையில் திருவமுடியாது. எனினும் கடித்து தின்னலாம். அல்லது கத்தியால் சிறிது சிறிதாக கீறிப்போட்டு உரலில் இட்டு மிளகாயுடன் சேர்த்து சம்பல் இடிக்கப் பாவிக்கலாம். சிறிது அடுப்பிலிட்டு சூடாக்கிப்போட்டு இடித்தால் சம்பலில் எண்ணை தோன்றும்.

சரி போர்த் தேங்காய் அடித்தலுக்கு வருவோம். 1950 - 1970 களில் இளைஞர்கள் சித்திரை வருடப் பிறப்பு அன்று கோவில்கள்  நண்பர்கள் வீடுகள் உறவினர் வீடுகள் என கையில் இவ்வகை போர்த் தேங்காய்களுடன் சுற்றித் திரிவர். யாராவது தேங்காயுடன் அகப்பட்டால் இவர் தனது தேங்காயை கீழே வைத்து மற்றவரை அவரது தேங்காய் கொண்டு அடிக்க சொல்வார். அப்படி அடிக்கும் போது யாருடைய தேங்காய் உடைகிறதோ அவர் தோற்றவராவார். மற்றவர் தனது
 போர்த் தேங்காயை எடுத்துக் கொண்டு ராஜ நடை போடுவார்.

இவர் அஞ்சாறு தேங்காய்களுக்கு வேலையை கொடுத்து விட்டால் செய்தி படபடவென எல்லோருக்கும் பரவி இவ்ரைக்கண்டால் மற்றவர்கள் ஏன் அடிக்கப்போய் மரியாதையை கெடுவான் என தங்களது தேங்காய்களை ஒளித்துக்கொண்டு திரிவார்கள்.
மாலை வரை இது தொடரும் அதுவும் சில வேளைகளில் வேலியூடாக இளம் பெண்கள பார்த்துக் கொண்டிருந்து விட்டால் ஓகோ  என விளையாட்டு நடக்கும்.
சிலவேளைகளில் தேங்காய் அடியில் ஒன்று சறுகி விட்டால் அடித்தவர் நிலத்தில் அடிபட்டு குளறுவதைப் பார்க்கக்  கொடுத்து  வைக்கவேண்டும்.
 
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போல  தேங்காய் போர் விளையாட்டு! (படங்கள்)
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?PVN=90255

No comments:

Post a Comment