
வருவதல்லாம் வரட்டும், தருவதெல்லாம் தரட்டும். நன்மையோ தீமையோ ஏற்றுக்கொள்வோம்.
நம்ம ஸ்ரேசன்.
எமது நண்பர் ஒருவரை பயணமனுப்ப நண்பர்கள் எல்லோரும் கூட்டமாக புகையிரத நிலையம் சென்றிருந்தோம். அவர் புகையிரத சீற்றிலமர்ந்தவுடன் பயணக் காசு என்று சொல்லி அவரது பாக்கெட்டிலுள்ள சில்லறையைப் பிடுங்குவதுதான் வழியனுப்புவது என்பதன் கோட்பாடு.
புகையிரதத்தில் இடம் பிடித்து நண்பர்களுக்குக் கொடுப்பது சிலருக்கு சந்தோசமான விடயம். சரி கதைக்கு வருவோம். நண்பர் பிரயாணஞ் செய்யவிருந்த புகையிரதம் சீறிக்கொண்டு (டீஸல் எஞ்சின்தான்) ஸ்ரேசனுள் வந்து பின் தனது அசுர வேகத்தைக் குறைக்கத் தொடங்கியது. வேகங் குறையத் தொடங்கியதுதான் தாமதம் பிளாற்போம் நுனியில் நின்றவர்கள் பயத்தில் விலகி இடங்கொடுக்க சீற் பிடிக்கும் துணிச்சலுள்ள இளைஞர்கள் பட் பட்டென பெட்டிகளை நோக்கிப்பாய்ந்தனர்.
திடீரென நின்றவர்களெல்லாம் அலறத் தொடங்கினர். நான் எனக்கு முன் நின்றவர்களை விலக்கிக்கொண்டு பார்த்தபோது ரயில் பெட்டியின் கைபிடியில் தொங்கியவண்ணம் சீற் பிடிக்கப் பாய்ந்தவர்களிலொருவர் பிளாற்போமின் மட்டத்தில் இடுப்புத்தெரிய கரணந்தப்பினால் உயிரோ காலோ போகும் நிலையில் வந்துகொண்டிருந்தார்.
எனக்கு எங்கிருந்து அந்த துணிச்சல் வந்ததோ தெரியாது பாய்ந்துசென்று கண்ணிமைக்கும் நேரத்துள் குழந்தையை தூக்குவது போல இரு கைகளைக் கொடுத்து தூக்கி நிறுத்தியபின்
ரயிலும் நின்றது.
நடுநடுங்கி நின்றவரை போ எனத் தட்டி அனுப்ப அவர் அப்படியே கூட்டத்துள் சங்கமாகிவிட்டார். திடீரென ஒரு பொலிஸ்காரர் என் முன்தோன்றி 'எங்கே அவன்? அவனைக் கொண்டு போய் ஸ்ரேஸனில் வைத்து நாலு சாத்துச் சாத்தி கோட்ஸில கொண்டு போய் பய்ன் அடிச்சாத்தான் மற்றவங்கள் திருந்துவாங்கள். நீதானே அவனைத் தூக்கி விட்டது?'
ஐயா நான் அவனில்லை.
சரி மிகுதிக் கதைக்கு வருவோம். நான் அவன்தான்.
நண்பர்களெல்லோரும் நண்பரிடம் பறித்த பயணக் காசுடன் ( சரியான கஞ்சப்பயல் எமது பயத்தில் பெரும்பான்மையான அளவு பணத்தை ஒளித்து விட்டான்.) ஒரு தேனீர்கடையொன்றினுள் நுழைந்து கணக்குப் பார்த்து மிச்சக்காசையும் சேர்த்து ஆளுக்கொரு வடையும் பிளேன்ரீயும் ஓடர் பண்ணிவிட்டு அலட்டல் கச்சேரியை ஆரம்பித்தோம்.
எனக்குப் பக்கத்திலிருந்த ஜீவா மட்டும் ஒன்றுமே பேசாமல் ஏதோ யோசித்துக் கொண்டேயிருந்தான். வடையும் பிளேன் ரீயும் சப்ளையர் கொண்டு வந்து வைத்து வி;ட்டு செல்ல எல்லோரும் பாய்ந்து எடுத்து கடிக்கவும் குடிக்கவும் ஆரம்பித்தனர். ஜீவா மட்டும் ஒண்டுமே பேசாமல் பிளேன் ரீயை குடித்துக் கொண்டிருந்தான். ஏன்னடாப்பா ஜீவா வீட்டை போக நேரம் போய்ட்டுதோ எண்டு ஜீவாவிட்ட கேட்டன்.
அதெண்டும் இல்லையடாப்பா, சீற் பிடிக்கப் பாயேக்க ஒருத்தனை தட்டி விட்டிட்டன். அவனுக்கு என்ன நடந்ததோ தெரியேல்ல, அது தான் யோசிச்சனான்.
அவன் என்ன கலர் சேட் போட்டிருந்தவன் - நான்
நீலக்கலரடாப்பா – ஜீவா.
கைபிடியில் தொங்கியவண்ணம் வந்த நீல சேட் போட்டிருந்தவனை கைகளைக் கொடுத்து நான் தூக்கி விட்டனான் எண்டவுன் ஜீவா கண்கலங்க என்னைக் கட்டிப்பிடித்தான். என்ன நினைத்தானோ தெரியவில்லை மிஞ்சியிருந்த அவனது வடையை எடுத்து இரண்டாகப் பிய்த்து பாதி வடையை எனக்குத்தந்து விட்டு பாதியை அவன் சாப்பிடத் தொடங்கினான். நான் நினைத்தேன் முழு வடையையும் எனக்குத் தரப்போகிறானென.