Wednesday, September 8, 2010

உனக்கு எப்படியடா தாய்க்கு இப்படிச் சொல்ல மனம் வந்தது?


சில வருடங்களுக்கு முன் கொட்டாஞ்சேனையிலுள்ள கொம்மினிகேசனில் எனது போனுக்கு றீலோட் போட நின்றுகொண்டிருந்தேன். ஒருவயதான தாய் ஒருவர் அவசரமாக உள்ளே வந்தார். தம்பி என்னர மகனோட ஒருக்கா அவசரமாய்க் கதைக்க வேணும். கையில காசில்ல, அவனும் கனகாலமாய் அனுப்பவுமில்லை. அவனும் வேலைக்குப் போயிடுவான். அதுக்குள்ள ஆளைப் பிடிக்கவேணும். நான் ஒருக்கா கதைச்சிட்டு விடட்டே எண்டா என்னைப் பார்த்து.
சரி என்று சொல்லி விலகி நின்று சுற்றுமுற்றும் பார்த்தேன். ரெண்டுபேர் போட்டோ கொப்பியடிக்க கொடுத்து விட்டு பார்த்துக் கொண்டிருந்தனர். மறுபுறத்தில் இளம் பெண்ணொருவர் கொப்பியோ பேனையோ வாங்கிக்கொண்டிருந்தார்.
முதலாளி போலும் அம்மாவைப் பார்த்துக் கேட்டார்.
பூத்தில தரவோ இதில கதைக்கப் போறியளோ?
இல்லையில்லை. நீங்க ஒரு நிமிடக்கோல் கதைத்து மகனை உங்கட நம்பருக்கு எடுக்கச் சொல்லுங்கோ.
மகன்ர பெயர்?
அம்மா பெயரைச் சொன்னா.

எந்த நாடு?
பிரான்ஸ்.

ரவுண்?
பரிஸ்.

நம்பர் சரியே?
இந்த துண்டில இருக்கிறது சரியான நம்பர். நான் இங்கயிருந்து கன தடவை அங்க கதைத்திருக்கிறன்.

அம்மா, நான் கதைத்துச் சொல்லவோ அல்லது ஸ்பீக்கர் போட்டு நீங்களுங் கேட்கப் போறியளோ?
ஸ்பீக்கர் போட்டா நானுங் கேட்கலாந்தானே.
முதலாளி ஸ்பெசலாக ஸ்பீக்கர் போட்டு வைத்து இருக்கிறார் போல வாறவைக்கு கோல் போகுதுதான் எண்டதை உறுதிப்படுத்திக் காட்ட.
முதலாளி நம்பரை அடிக்க ஸ்பீக்கர்ல கணீரென ரெலிபோன் அடிப்பது அங்கு நிண்ட எங்களெல்லோருக்குங் கேட்கிறது.
மறுபுறம் ஒரு இளம் பெண் எடுத்து கலோ என்றார். எங்களெல்லோருக்கும் அது தெளிவாகக் கேட்டது.
உடனே முதலாளி கொழும்பிலயிருந்து கொம்மினிகேசனில '--------'ட அம்மா கதைக்கிறா எண்டவுடன்
இஞ்சேருமப்பா கொழும்பிலயிருந்து அம்மா கதைக்கிறா, என்ன சொல்ல, மறுபக்கம் அந்தப்பெண் கத்தினாள். அதுவும் எங்களுக்குத் தெளிவாகக் கேட்டது.
அதற்கு மகன் சொன்ன மறுமொழியும் ஸ்பீக்கர்ல அங்கு நின்ற எங்களெல்லோருக்குங் தெளிவாகக் கேட்டது. நான் இல்லை எண்டு சொல்லும்.
அந்தப்பெண் அவர் (அங்கே அருகிலிருந்த பாதகனைப்பார்த்த வண்ணம்) கொஞ்சம் முந்தித்தான் வேலைக்குப் போனவர் எண்டாள் சண்டாளி.
முதலாளி போனை வைத்து விட்டு அந்தத் தாயை சோகமாய்ப் பார்த்தார்.
எனக்கென்றால் என் நெஞ்சினுள் ஈட்டி பாய்ந்தது போலிருந்தது.
பெற்ற தாய்க்கு இந்த மறுமொழியாடா பாவி. என் மனம் சபித்தது.
அந்தத் தாய் எதுவுமே நடவாதது போல எவ்வளவு தம்பி காசென்றார்.
முதலாளியும் ஒரு நிமிசந்தானே அடுத்த முறை வரேக்க தாங்கோ எண்டாh.;
நான் போனுக்கு றீலோட் போட்டுக் கொண்டு வெளியே வந்தேன் ஆனால் முதலாளியையோ அங்கிருந்தவர்களையோ நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
ஏனெண்டால் நாங்களெல்லோரும் ஸ்பீக்கர்ல கதையை கேட்டோமல்லவா.
(கற்பனையல்ல முற்றிலும் உண்மை.)

No comments:

Post a Comment