Wednesday, October 30, 2013

றீவைண்ட் யாழ்ப்பாணம். 1960

60களில் யாழ்ப்பாணம் பலருக்கு பெரிய சொர்க்கமாகவிருந்தது. எவருக்கும் பெரிதாக ஆசைகளில்லை. ரேடியோக்கள் கூட எல்லோரதும் வீடுகளில் இருந்ததில்லை. வீட்டுக்கொரு றலி சைக்கிள் அதுவும் டைனமோ லைற் கரியருடன் இருந்தால் பெரிய சொத்து. சந்திகளில் வாடகைக் கார்கள், றிக்சோக்கள் வாடகைக்கென நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். சில பணக்கார வீடுகளில் மாடு பூட்டிய வில்லு வண்டிகள் அவர்களது பாவனைக்கென வைத்திருந்தார்கள். சந்திக்குச் சந்தி சைக்கிள் மணித்தியால வாடகைக்கு விடும் கடைகளிருந்தன. இங்கு சைக்கிள் திருத்தல், சைக்கிள் கழட்டிப் பூட்டல், ரியூப் ஒட்டுதல் போன்ற வேலைகளும் செய்து கொடுப்பார்கள். வீதி ஓரங்களில் கொல்லன் பட்டடைகாரர் மாட்டுவண்டி சில்லுகளுக்கு இரும்பு வளையம் சூடாக்கிப் போடுவதையும் மாடுகளுக்கு லாடன் அடிப்பதையும் காணமுடிந்தது.


இளைஞர்களுக்கு கோபா கரியர், றோலிங் பெல், கியர்பொக்ஸ் உள்ள சைக்கிள் கிடைத்தால் அது அவர்களுக்கு அளப்பரிய சொத்து. இதனைக்கொண்டு மாலை வேளைகளில் 'சுழட்டல்' என்றழைக்கப்பட்ட இளம் பெண்களைக் கவரும் வீதி உலா ஒழுங்கை உலாவில் ஈடுபடுவர். அனேகமாக அண்ணன்மார் தம்பிமார் இல்லாத இளம் பெண்களைத்தான் இவர்கள் பார்ப்பதற்கு தெரிவுசெய்வர். காரணம் இந்த சகோதரங்களிடம் இந்த சைக்கிள் காவாலிகள் அகப்பட்டால் அருகிலுள்ள லைட்போஸ்ற்றில் கட்டிவைத்து விடுவார்கள்.

செருப்பு, சப்பாத்து நீளக்கால்சட்டை அணிபவர்களுக்கு மட்டுமே கட்டாயமானது. ஏன் பல பாடசாலைகளில் அருகிலுள்ள முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் சேர்ட் போட்டதாக சரித்திரமில்லை. காலையில் அருகிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்கள் நேரத்துடனேயே சென்றுவிடுவார்கள் காரணம் அமெரிக்காவிலிருந்த கெயர் என்ற நிறுவனத்தினால் இலவசமாக வழங்கப்பட்ட பால்மாவினால் தயாரிக்கப்பட்ட சூடான பால்தான் காரணம்.

தொடரும்
 

1 comment:

நம்பள்கி said...

இப்ப சைக்கிள் இருக்கா? இல்லையா?
தமிழ்மணம் வோட்டு +1

Post a Comment